டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீராங்கனை விலகல்

ரிபாகினா நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், யு.எஸ். ஓபன் ஆகிய இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
rybakina
Published on: 
Summary

நம்பர் 1 வீராங்கனையான எலினா ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது.

கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரவமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகோ காப், 5-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, விம்பிள்டன் சாம்பியனும், 8-வது இடத்தில் உள்ளவருமான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரிபாகினா விலகல்

இந்நிலையில், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு காரணமாக டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக முழு உடல் தகுதியுடன் போட்டியிட உடல் ஒத்துழைக்கவில்லை என ரிபாகினா தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜப்பானில் நடந்த பான் பசிபிக் ஓபன் காலிறுதிப் போட்டியிலிருந்தும் கழுத்து வலி காரணமாக அவர் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலினா ரிபாகினாவுக்கு பதிலாக உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யூக் டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் தொடரின் குரூப் 1 பிரிவில் இடம்பிடித்தார்.

இதுதொடர்பாக ரிபாகினா கூறுகையில், இந்த ஆண்டு டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் தொடரிலிருந்து நான் விலக நேரிட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த சீசன் எனக்கு மிகச் சிறந்ததாக அமைந்தது. தற்போதைய சூழலில் போட்டியிட எனது உடல் தயாராக இல்லை. வீட்டில் ஓய்வெடுத்துக் குணமடைந்து, 2027 சீசனுக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளப் போகிறேன் என என்றார்.

நம்பர் 1 வீராங்கனை

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், யு.எஸ். ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்திய எலினா ரிபாகினா, 2026-ம் ஆண்டின் 'நம்பர் 1' வீராங்கனை என்ற அந்தஸ்தோடு இந்த சீசனை நிறைவு செய்துள்ளார்.

X