

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஆத்திரத்தில் ரசிகர் முகத்தில் பந்தை அடித்த ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5 என முதல் செட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 2வது செட்டில் 5-3 என முன்னிலை பெற்றிருந்தார்.
அப்போது, ஜோகோவிச் அடித்த ஒரு பந்தை தவறவிட்டு புள்ளியை இழந்த ஆத்திரத்தில் மெத்வதேவ் கேலரியை நோக்கி பந்தை ஓங்கி அடித்தார்.
அந்தப் பந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த ரசிகரின் முகத்தில் பலமாக தாக்கியது. இதில் வலியால் துடித்த அந்த ரசிகரை சிகிச்சைக்காக ஸ்டேடியத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, போட்டியில் இருந்து டேனில் மெத்வதேவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.