

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் கஞ்சா வாசனை அடித்ததால் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா ஆட்டத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவா உடன் மோதினார்.
முதல் செட்டில் சபலென்கா 2-0 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது மைதானத்தில் கஞ்சா வாசனை வீசியது. இதனால் திணறிய சபலென்கா நடுவரிடம் சென்று, மைதானத்தில் யாரோ கஞ்சா புகைப்பதாகவும், அதன் நெடி கடுமையாக வீசுவதாக புகார் அளித்தார்.
நியூயார்க்கில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமானது. ஆனாலும், மைதான வளாகத்திற்குள் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், ஆட்டம் தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதுதொடர்பா பேசிய சபலென்கா, இரண்டாவது செட்டில் ரகிமோவா அபாரமாக ஆடி தனக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் என தெரிவித்தார்.
தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்கவைக்க சபலென்கா இத்தொடரில் கோப்பை வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.