ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மா சாதனையை முறியடித்த டெம்பா பவுமா

சைமன் ஹார்மர் 82 ரன்கள் பங்களித்ததால், தென் ஆப்பிரிக்கா 425/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
Temba Bavuma
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 334 பந்துகளில் 179 ரன்கள் குவித்து, ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா அசத்தலாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.

இவருடன் ஆடிய ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சனும் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி, தென் ஆப்பரிக்க அணி மீண்டு வர உதவியதுடன், ஒரு புதிய சாதனையையும் படைத்தார்.

தென் ஆப்பிரிக்கா 110/6 என்ற நிலையில் தடுமாறி கொண்டிருந்தபோது, ​​கேப்டன் டெம்பா பவுமா மற்றும் யான்சன் இணைந்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்காட் போலண்டின் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழப்பதற்கு முன்பு, யான்சன் 100 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார்.

இடது கை பேட்டரான யான்சென், பவுமாவுடன் ஏழாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்து, 110 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா மீண்டு வர உதவினார்.

கேப்டனின் சாதனை

சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டபோதிலும், யான்சனின் பங்களிப்பு, தென் ஆப்பிரிக்கா ஒரு இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரவும், ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதலுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவும் உதவியது.

பவுமா தனது ஆட்டத்தின்போது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் எட்டினார். ஆட்டம் தொடங்கும் நேரத்தில் 36 வயது மற்றும் 154 நாட்களில் இருந்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டியில் சதம் அடித்த மிக வயதான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 2023-ஆம் ஆண்டு நாக்பூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 35 வயது மற்றும் 285 நாட்களில் சதம் அடித்து படைத்த சாதனையை இவர் முறியடித்தார்.

பவுமா அசத்தல் இன்னிங்ஸ்

முந்தைய நாள் ஆட்ட முடிவில் 97/5 என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது நாள் காலையில் மேலும் சரிந்து 110/6 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன்பின் பவுமாவும், யான்சனும் ஆக்ரோஷத்தையும் பொறுமையையும் ஒருங்கே கையாண்டு, அணியின் நிலையை மீட்டு, ஆட்டத்தை சீராக்கினர்.

மதிய உணவு இடைவேளையின்போது, ​​பவுமா 76 ரன்களுடனும், யான்சன் 72 ரன்களுடனும் களத்தில் இருக்க, தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எட்டியிருந்தது.

பவுமா தனது வாழ்நாள் சிறந்த டெஸ்ட் ஸ்கோரான 179 ரன்களை எடுத்தார், அதே நேரத்தில் சைமன் ஹார்மர் 82 ரன்கள் பங்களித்ததால், தென் ஆப்பிரிக்கா 425/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா வலுவான பதிலடி கொடுத்த நிலையில், ஆஸ்திரேலியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 3 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் ஆட்ட நேரத்தை நிறைவு செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com