ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Joshna - CM Vijay
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கமும், இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கல பதக்கமும் வென்றது.

இந்நிலையில், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், மகளிருக்கு இந்த வெற்றி உத்வேகம் அளிக்கும் என வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ்-க்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

அவர்களது வெற்றி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்குச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com