ஹைலோ ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து; தொடரிலிருந்து வெளியேறிய இஷாரானி மற்றும் மாளவிகா

டென்மார்க் வீராங்கனை சிறப்பாக செயல்பட்டு நேர் செட்களில் வெற்றியை உறுதி செய்தார்.
PV Sindhu
Published on: 

ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற பி.வி. சிந்து, ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், அவர் தனது எதிராளியை நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார்.

அதேசமயம், அவருடன் பங்கேற்ற இந்திய வீராங்கனைகளான மாளவிகா பன்சோட் மற்றும் இஷாரானி பருவா ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறினர்.

26 நிமிடங்களில் வெற்றி:

இரண்டாவது நிலை வீராங்கனையான பி.வி. சிந்து, பிரான்சின் ரோஸி ஆக்டேவியா பான்கசாரியை 21-9, 21-6 என்ற நேர் செட்களில், வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்தார்.

பிரெஞ்சு ஓபன் தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த கையோடு களமிறங்கிய முன்னாள் உலக சாம்பியனான சிந்து, ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் வைத்திருந்தார். மொத்தம் விளையாடப்பட்ட 57 புள்ளிகளில் 42 புள்ளிகளைக் கைப்பற்றிய அவர், தனது எதிராளியை வெறும் 15 புள்ளிகளுக்குள் கட்டுப்படுத்தினார்.

முதல் சுற்றில் பிரகிருதி பரத்தை வீழ்த்திய சிந்து, காலிறுதியில் அமலி ஷூல்ஸை எதிர்கொள்கிறார்.

இருவர் வெளியேற்றம்:

இதற்கிடையில், மாளவிகா பன்சோட் கனடாவின் வென் யூ ஜாங்கிடம் 11-21, 17-21 என்ற கணக்கில் 31 நிமிடங்களில் தோல்வியடைந்தார். முதல் செட்டில் ஜாங்கின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய மாளவிகா, இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடியும், ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இஷாரானி பருவா, டென்மார்க்கின் எட்டாம் நிலை வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்ட்டிடம் 14-21, 19-21 என்ற கணக்கில் 39 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தோல்வியடைந்து வெளியேறினார். இரண்டாவது செட்டில் இஷாரானி கடும் சவால் அளித்தார், இருப்பினும் டென்மார்க் வீராங்கனை சிறப்பாக செயல்பட்டு நேர் செட்களில் வெற்றியை உறுதி செய்தார்.

மற்ற இந்தியர்களில், ஆறாம் நிலை வீராங்கனை உன்னதி ஹூடா, டென்மார்க்கின் ஃப்ரெடெரிக் ஆஸ்டர்கார்டை எதிர்கொள்கிறார். மேலும், இந்திய ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணியில் உள்ள லக்ஷ்ய சென், சக இந்திய வீரர் கிரண் ஜார்ஜை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப், டென்மார்க்கின் மூன்றாம் நிலை வீராங்கனை லைன் கிறிஸ்டோபர்சனை எதிர்கொள்கிறார்.

X