

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் நிதேஷ் இன்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்தியா இதுவரை 10 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆண்கள் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 97 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நகோயாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவின் நிதேஷ், ஜப்பானின் நட்சத்திர வீரர் யூரி நகாசடோவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே ஜப்பான் வீரர் சிறப்பாக செயல்பட்டு 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இந்திய வீரர் நிதேஷ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியா இதுவரை 10 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களைப் பெற்றுள்ளது.