

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான நிறைவு விழாவில் இந்தியா சார்பாக நீரு தண்டா தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தார்.
ஜப்பானின் அய்சி-நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.
இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.
இந்தியா சார்பாக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 3 பதக்கம் வென்று அசத்தினார். தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற இவர், மகளிரணி பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தினார்.
தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உள்பட 85 பதக்கங்கள் வென்றன.
பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. சீனா முதலிடமும், ஜப்பான் இரண்டாமிடமும், தென் கொரியா மூன்றாவது இடமும் பிடித்து அசத்தின. இந்தியா சார்பில் நீரு தண்டா தேசியக்கொடி ஏந்தி நிறைவு விழாவில் பங்கேற்றார்.
அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2030-ம் ஆண்டில் தோஹாவில் நடைபெற உள்ளதால் அதன் கொடியை ஆசிய ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் சேக் ஜோன் பின் ஹமது அல் தானி கத்தார் அதிகாரிகளிடம் வழங்கினார்.