

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த 2022இல் ஒற்றையர் டென்னிசிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
தற்போது 2026இல் அவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவரின் தனிப்பட்ட வாழ்வில் பட்ட கஷ்டங்கள் குறித்த தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
செரீனா - அலெக்சிஸ் தம்பதியருக்கு 2017 இல் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஒலிம்பியா எனப் பெயரிடப்பட்டது.
முதல் குழந்தையை பெற்றபோது சந்தித்த சவால்களை செரினா பகிர்ந்துள்ளார்.
2017 செப்டம்பர் 1 அன்று பிரசவத்தின் போது குழந்தையின் இதயத் துடிப்பு திடீரென குறைந்ததால், அவருக்கு அவசர C section அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குழந்தை பாதுகாப்பாக பிறந்தாலும், அடுத்த நாளே செரீனாவுக்கு தீவிர உடல்நலக் குறைபாடு உண்டானது.
சிடி ஸ்கேனில் அவரது நுரையீரலில் பல சிறிய ரத்த உறைவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டு, சி செக்ஷன் தையல்கள் பிரிந்தன.
இதனால் அவரது வயிற்றில் ரத்தம் உறைந்து பெரிய அளவிலான கட்டி உருவானது. அதை சரிசெய்யவும்,
மேலும் ரத்த உறைவுகள் நுரையீரலை அடையாமல் தடுக்கவும் அவருக்கு மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தாய்மையின் முதல் 6 வாரங்களை அவர் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.
சாதாரண நடைபயிற்சி கூட அவருக்கு மிகக் கடினமாக இருந்தது. பின்னாளில் கட்டுரை ஒன்றில் எழுதுகையில் தான் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததாக செரீனா குறிப்பிட்டிருந்தார்.
2017 க்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கியிருந்த செரீனாவுக்கு, அவரது மகள் ஒலிம்பியா ஒரு புதிய நம்பிக்கையை அளித்தார்.
பிரசவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளுக்கு செரீனா முன்னேறினார்.
2018 விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குப் பிறகு, செரீனா தனது ஆட்டத்தை மகள் ஒலிம்பியாவுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பித்தார்.
ஆகஸ்ட் 2022இல், செரீனா ஒற்றையர் டென்னிஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆகஸ்ட் 2023 இல் செரீனா-அலெக்சிஸ் தம்பதியருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு அடீரா ரிவர் ஓஹானியன் என பெயரிடப்பட்டது.
Serena Ventures என்ற நிறுவனத்தை தொடங்கி விளையாட்டை தாண்டிய தொழில்முனைவோராக தற்போது செரீனா வளம் வருகிறார்.
2022-இல் ஒற்றையர் ஆட்டத்திலிருந்து விலகினாலும், 2026இல் அவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்திற்குத் திரும்பியுள்ளார்.