

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு மகளிர் தனிநபர் வில்வித்தை ரிகர்வ் (recurve) போட்டியில், இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத், தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஜப்பானில் இன்று நடைபெற்று் வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் தனிநபர் வில்வித்தை ரிகர்வ் (recurve) போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த வீராங்கனையான கும்கும் மோஹோத் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
முன்னதாக வில்வித்தை (ரிகர்வ்) பிரிவில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், சீன வீராங்கனையான ஜிங்கி ஜூவை எதிர்த்து கும்கும் மோஹோத் விளையாடினார்.
அப்போது இவர் 28-27, 30-30, 29-29 மற்றும் 29-28 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
இதன்மூலம் கும்கும் மோஹோத் 2028-இல் லாஸ் எஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இடத்தை உறுதி செய்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், தென் கொரிய வீராங்கனையான ஓ யேஜினை எதிர்த்து கும்கும் களம் கண்டார்.
அப்போது விறுவிறுப்பாக நடந்த போட்டி 5-5 என்ற புள்ளியில் சமனில் இருந்தது. இதன் காரணமாக ஷூட்-ஆஃபில் நடைபெற்ற போட்டியின்போது, கும்கும் 10 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் தனிநபர் ரிகர்வ் பிரிவில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை கும்கும் மோஹோத் படைத்தார்.