இளையோர் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம்: வரலாற்று சாதனை படைத்த லைரென்லக்பம் அம்பேக்கர்

மீட்டியின் இந்த வெற்றி இந்திய குத்துச்சண்டைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
L Ambekar Meetei
Published on: 

டக்கார் 2026-இல் நடைபெற்ற ஆடவர் 50 கிலோ எடை பிரிவு இறுதி போட்டியில், அயர்லாந்தின் ஜுபானி கிறிஸ்டியனை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி, லைரன்லக்பாம் அம்பேகர் மீட்டி இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது, நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்ததுடன், நாட்டின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்தியுள்ளது என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறிப்பிடத்தக்க மைல்கல்:

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியா இதுவரை தங்க பதக்கம் வென்றதில்லை என்பதால், அம்பேகர் மீட்டியின் இந்த வெற்றி இந்திய குத்துச்சண்டைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, ஒட்டுமொத்த தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

அரையிறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனின் லில்லி பாசெட்டை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து, அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவின் இசோன் ஜெஃப்ரி காலியா அரேவலோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்க போட்டிக்கு முன்னேறுவதற்காக அம்பேகர் மீட்டியும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

முதல் இந்திய பெண்:

டக்காரில் இந்தியா இதற்கு முன்னர் வென்ற பதக்கங்கள், தடகளம், மல்யுத்தம், ஜூடோ, பேட்மிண்டன், நீச்சல் மற்றும் வுஷு போன்ற பல்வேறு பிரிவுகளில் கிடைத்துள்ளன. நாட்டின் இளம் வீரர்கள் இந்த போட்டிகளில் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

தடகள போட்டிகளில், ஷௌர்யா அம்பூரே பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில், தனது தனிப்பட்ட சிறந்த நேரமான 13.59 வினாடிகளில் ஓடி வெண்கல பதக்கம் வென்றார். அவரது இந்த சாதனை, இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தடகள பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் அவருக்கு பெற்று தந்தது.

முதல் இளையோர் மல்யுத்த பதக்கம்:

மல்யுத்த வீராங்கனை தனியா, இந்த தொடரில் பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவின் முதல் இளையோர் மல்யுத்த பதக்கத்தை பெற்று தந்தார். இறுதி போட்டியில், 69 கிலோ எடைப் பிரிவில் 2025 U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற சீனாவின் மின் ஜாவோவிடம் அவர் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

குஷ்பு ராஜக்பாய் தர்ஜடா மற்றும் தன்வி பாத்ரி (பேட்மிண்டன்) ஆகியோரும் இந்தியாவின் பதக்க பட்டியலுக்கு வெள்ளி பதக்கங்களை பெற்று தந்தனர்.

X