

ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெண்கலம் வென்று அசத்தியது.
ஜப்பானில் நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மகளிர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ரைசா தில்லன், மகேஸ்வரி சௌகான், பரினாஸ் தலிவால் ஆகியோர் அடங்கிய அணியினர் 331 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இதில் ரைசா மற்றும் பரினாஸ் இருவரும் தலா 111 புள்ளிகளையும், மகேஸ்வரி 109 புள்ளிகளையும் பெற்றனர்.
இதேபோல் ஆண்கள் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ஆனந்த்ஜித் நகுரா, மைராஜ் அகமது கான், பவ்தேக் சிங் கில் ஆகியோர் அடங்கிய அணியினர் 346 புள்ளிகளுடன் மூன்றாவது இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர். இதில் ஆனந்த்ஜித் 119 புள்ளிகளையும், அகமது கான் 116 புள்ளிகளையும், பவ்தேக் சிங் 111 புள்ளிகளையும் பெற்றனர்.
துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணி தற்போது 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்திய அணி துப்பாக்கிச் சுடுதலில் 4 வெள்ளி, பளு தூக்குதலில் ஒரு வெள்ளி என மொத்தம் 5 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளன.