

ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
சுனில்குமார் தலைமையிலான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான், தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. ‘பி’ பிரிவில் ஈரான், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 49-24 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 63-31 என்ற கணக்கில் தென் கொரியாவையும், 3-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 48-25 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
மற்ற ஆட்டங்களில் ஈரான் 83-27 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தையும், ஜப்பான் 62-35 என்ற கணக்கில் தென் கொரியாவையும் தோற்கடித்தன.
புஷ்பா ரானா தலைமையிலான இந்திய மகளிர் அணி வங்கதேசம், ஈரான், ஜப்பான் அணிகள் இடம்பெற்றுள்ள ‘ஏ’ பிரிவில் உள்ளது. இலங்கை, தாய்லாந்து, நேபாளம், சீன தைபே ஆகிய அணிகள் ‘பி’ பிரிவில் இருக்கின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை 42-21 என்ற புள்ளிக்கணக்கிலும், 2-வது போட்டியில் ஈரானை 37-23 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை இன்று மாலை 4.15 மணிக்கு எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்தது.