உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா- நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்திய அணி இன்று, தியரி பிங்க்மேன் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
Indian hockey team
Published on

உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை ஆக்கி

16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின.

2-வது சுற்றுக்கு வந்துள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படுள்ளன. இதன்படி 'இ' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, 'எப்' பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ் திரேலியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 2-வது சுற்று முடி வில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இரண்டாவது சுற்றை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடும். ஏற்கனவே லீக் சுற்றில் சந்தித்த அணியுடன் மோதாது. உதாரணமாக இந்திய அணி, ஏற்கனவே இங்கிலாந்துடன் மோதி விட்டதால் மீதமுள்ள இரு அணிகளுடன் (நெதர்லாந்து, அர்ஜென்டினா) மட்டும் களம் காணும்.

இந்தியா-நெதர்லாந்து மோதல்

இதன்படி ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 2-வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை), தியரி பிங்க்மேன் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி லீக் சுற்றில் (டி பிரிவு) வேல்ஸ் (3-1) மற்றும் பாகிஸ்தானை (5-3) வீழ்த்தியும், இங்கிலாந்திடம் (2-4) தோற்றும் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதியில் முன்னிலை வகித்த இந்தியா கடைசியில் கோட்டை விட்டது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்ற பிறகு 3 கோல் வாங்கியது.

எனவே இந்திய அணி தடுப்பு ஆட்டத்தில் கடைசி வரை சிறிய தவறுக்கும் இடம் அளிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அணியான நெதர்லாந்து லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, ஜப்பான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை சொந்தமாக்கியது.

இரவு 7.30 மணிக்கு...

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடும் வலுவான நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளிக்க வேண் டும் என்றால் இந்திய அணி எல்லா வகையிலும் மிக உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சாத்தியமாகும். இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 7 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 6 முறை நெதர்லாந்து வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கேப்டன் கருத்து

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நேற்று கூறுகையில், 'இது எங்களுக்கு வாழ்வா- சாவா? போட்டியாகும். ஆட்டத்தில் அவ்வப்போது நன்றாக விளையாடினால் மட்டும் போதாது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி நிமிடம் வரை மிகச்சிறப்பாக விளையாட வேண்டும்.

உத்வேகமும் தளர்ந்து விடக்கூடாது. கடந்த 3 ஆட்டங்களில் நாங்கள் செய்த தவறுகளை வீடியோ உதவியுடன் ஆய்வு' செய்துள்ளோம். அந்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். தற்காப்பு ஆட்டத்தில் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளை இதற்கு முன்பு வீழ்த்தி இருக்கிறோம். பெரிய அணியை அவர்களது ரசிகர்கள் முன்பு வீழ்த்துவது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும். அதை செய்ய நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது' என்றார்.

பெண்கள் அணி தோல்வி

பெண்கள் போட்டியின் 2-வது சுற்றில் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா நேற்றிரவு நடந்த ஆட்டத் தில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்துடன் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை சந்திக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com