இந்திய ஹாக்கி ரசிகர்களின் 51 ஆண்டுகால உலகக்கோப்பை பதக்கக் கனவை இம்முறை எப்படியாவது நனவாக்க வேண்டும் என்று முழு மூச்சில் களமிறங்குகிறது இந்த ஆடவர் ஹாக்கி அணி.
சனிக்கிழமை அன்று நடக்கவுள்ள தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த உலககோப்பைகளில் இந்திய அணி 6 மற்றும் 9 வது இடங்களை மட்டுமே பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது.
இந்த முறை பெங்களூரு சாய் மைதானத்தில் கடுமையான உடல் தகுதிப் பயிற்சிகளையும், சுவிட்சர்லாந்தில் மனவலிமைக்கான சிறப்பு முகாம்களையும் முடித்துவிட்டு, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மிகவும் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை 4 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும். அதன் முக்கியத்துவம் எங்களுக்கே தெரியும். கடந்த இரண்டு உலகக்கோப்பைகளை நாம் சொந்த நாட்டில் விளையாடினோம், இந்த முறை வேறு ஒரு புதிய சூழலில் விளையாடப் போகிறோம்.
இந்த வாய்ப்பை இந்திய ஹாக்கி வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாற்ற அணி வீரர்கள் துடிக்கிறார்கள்.
இதை நான் பயம் என்றோ, பிரஷர் என்றோ சொல்ல மாட்டேன். இது எங்களுடைய பொறுப்பு, நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமை. கடந்த காலத்தில் இந்தியா ஹாக்கியில் படைத்த வரலாற்றுச் சாதனைகள் தான் எங்களை இன்னும் வேகமாக ஓட தூண்டுகின்றன.
உலகத் தரவரிசையில் நாம் 7-வது இடத்தில் இருக்கிறோம். இது நமக்கு குறைவான ரேங்கிங் தான். இத்தொடரில் நாம் களம் இறங்கும்போது பலவீனமான அணியாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு குழுவாக எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
ஒவ்வொரு வீரருக்கும் தங்களின் கடமை என்னவென்று நன்றாகத் தெரியும். சின்ன வயதில் இருந்தே நாட்டின் ஜெர்சியை அணிந்து உலகக்கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது தான் அவர்களின் கனவு.
பெரிய தொடர் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இளம் வீரர்கள் மேல் தேவையில்லாத பிரஷரை நாங்கள் ஏற்ற விரும்பவில்லை.
அவர்களை மைதானத்தில் பயமில்லாமல், ஆட்டத்தை ரசித்து விளையாடச் சொல்லியிருக்கிறேன். ஒரு டீமாக திட்டங்களைச் சரியாகச் செய்தால், வெற்றி நிச்சயம் நம் பக்கம் வரும்.
கேப்டனாக என் மேல் எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஆனால் இப்போது அணியில் எனக்குப் போட்டியாகவும், எனக்கு உதவியாகவும் பல திறமையான வீரர்கள் இருப்பது அணிக்குக் கிடைத்த பெரிய பிளஸ் பாயிண்ட்.
மைதானத்தில் வேகமாக ஓடிவந்து திடீரென பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கும்போது, பதற்றப்படாமல் எப்படி மனதை அமைதியாக வைத்து இலக்கைத் தாக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
"அதிகமாக யோசிக்காதீங்க, உங்க திறமையை நம்பி 100% உழைப்பைக் கொடுங்க" என்பது தான் அவர்களுக்கு நான் கொடுத்த எளிய மெசேஜ் என்று கூறினார்.
சமீபத்தில் நடந்த ப்ரோ லீக் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் பல புதிய திட்டங்களைச் செய்து காட்டி வெற்றி பெற்றோம். அந்த தைரியம் இப்போது எங்களிடம் உள்ளது.
அவர்களின் ஆட்ட முறை நம்மைப் போன்றது தான் என்பதால், அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இந்த உலகக்கோப்பையில் சரியாகப் பயன்படுத்துவோம்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றாலே மைதானத்தில் சுற்றியிருக்கும் ரசிகர்களிடம் ஒரு தனி உணர்ச்சியும், பரபரப்பும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் எந்த பயமும் இல்லை.
எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்காக விளையாடுகிறோம் என்ற அந்தப் பொறுப்பு தான் முக்கியம். எங்கள் கவனம் முழுக்க ஆட்டத்தின் மீது மட்டுமே இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.