பிரிட்டிஷ் செஸ் தொடரில் இளம் தலைமுறையின் வரலாற்று சாதனை: 3 இளம் இந்திய வம்சாவளி நட்சத்திரங்கள் முத்திரை!

முன்னணி கிராண்ட்மாஸ்டர் லூக் மெக்ஷேனை வீழ்த்தியும், 9 முறை சாம்பியனான மைக்கேல் ஆடம்ஸுக்கு எதிராக டிராவை பதிவு செய்தும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
British Chess series
Published on

இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 122-வது பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2026, பிரிட்டிஷ் செஸ் வரலாற்றிலேயே ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்துள்ளது. இந்தத் தொடரில் மூத்த கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 இளம் திறமையாளர்கள் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளனர்.

17 வயதில் பிரிட்டிஷ் சாம்பியன் பட்டம்

டெர்ட்ஃபோர்ட் நகரைச் சேர்ந்த 17 வயது கிராண்ட்மாஸ்டர் ஸ்ரேயாஸ் ராயல், ஒட்டுமொத்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 1989-இல் மைக்கேல் ஆடம்ஸ் தனது 17 வயதில் படைத்த மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை, ஸ்ரேயாஸ் 2 மாதங்கள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.

மொத்தம் 107 சர்வதேச வீரர்கள் பங்கேற்ற இந்த திறந்தநிலை பிரிவில், 9 சுற்றுகளின் முடிவில் 7.5/9 புள்ளிகள் பெற்று தோல்வியே சந்திக்காத ஒரே வீரராக ஸ்ரேயாஸ் மகுடம் சூடினார். இவருக்கு முதன்மை பரிசாக £10,000 (சுமார் 10.5 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டது. முன்னணி கிராண்ட்மாஸ்டர் லூக் மெக்ஷேனை வீழ்த்தியும், 9 முறை சாம்பியனான மைக்கேல் ஆடம்ஸுக்கு எதிராக டிராவை பதிவு செய்தும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

மிகக் குறைந்த வயதில் பிரிட்டிஷ் மகளிர் சாம்பியன்

லண்டனைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவநந்தன், பிரிட்டிஷ் மகளிர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். மகளிர் பிரிவில் அயர்லாந்தின் வுமன் கிராண்ட்மாஸ்டர் த்ரிஷா கன்யாமாராலாவை 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் டை-பிரேக் சுற்றில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

1939-இல் எலைன் பிரிட்சார்ட் தனது 13 வயதில் படைத்த சாதனையை முறியடித்த போதனா, ஏற்கனவே பிளிட்ஸ் மற்றும் ரேபிட் சாம்பியன் பட்டங்களை வைத்திருந்த நிலையில், தற்போது கிளாசிக்கல் பட்டத்தையும் வென்று 'முப்பரிமாண சாம்பியன்' பட்டம் பெற்றுள்ளார். தொடரில் கிராண்ட்மாஸ்டர் அமித் காசியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்திய போதனாவின் ஆட்டம், போட்டியின் சிறந்த ஆட்டமாகக் கருதப்பட்டு £100 மதிப்பிலான "அலெக்சாண்டர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

12 வயதில் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம்

சட்டன் கிராமர் பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர் சுப்ரதித் பானர்ஜி, இங்கிலாந்தின் மிக இளம் வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 3-வது ஐஎம் நார்மை பூர்த்தி செய்த சுப்ரதித், அடுத்த சில நாட்களிலேயே ஸ்வீடனில் நடைபெற்ற தொடரில் பங்கேற்று 2400 FIDE ரேட்டிங் இலக்கை எட்டி அதிகாரப்பூர்வமாக இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

இதற்கு முன் இங்கிலாந்தின் லூக் மெக்ஷேன் மற்றும் டேவிட் ஹோவெல் ஆகிய இருவருமே 13 வயது 2 மாதங்களில் ஐஎம் பட்டம் பெற்றிருந்த நிலையில், சுப்ரதித் தனது 12 வயது 5 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

புதிய தலைமுறையின் ஆதிக்கம்

122 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க பிரிட்டிஷ் செஸ் தொடரில் 2,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், அனுபவமிக்க முன்னணி கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி இந்த மூன்று இளம் வீரர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இங்கிலாந்து செஸ் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com