

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடப்பாண்டின் காமென்வெல்த் போட்டிகள் கடந்த ஆஜிஸ்ட் 2 அன்று முடிந்தன. இதில் 39 பதக்கங்களுடன் இந்தியா 4 ஆம் இடம் பிடித்தது.
இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர்.
இதனிடையே, 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளன.
இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் அதிக பங்களிக்கும் அரியானாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று பாராளுமன்ற வளாகத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பி தீபேந்தர் சிங் ஹூடாவுடன், அரியானாவை சேர்ந்த பிற காங்கிரஸ் எம்பிக்களான ஜெய் பிரகாஷ், வருண் முல்லானா, சத்பால் பிரம்மச்சாரி மற்றும் கர்மபீர் பௌத் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பதக்கங்களை அரியானா தருகிறது, ஆனால் போட்டிகளை நடத்த குஜராத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தீபேந்திர சிங் ஹூடா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தீபேந்தர் சிங் ஹூடா பேசுகையில், "நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அரியானா சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்றுத் தரும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
மல்யுத்தம், பாக்ஸிங், தடகளம், துப்பாக்கிச் சூடு மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அரியானா வீரர்கள் தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அரியானா வீரர்களின் இணையற்ற பங்களிப்பையும், மாநிலத்தின் விளையாட்டுத் திறனையும் அங்கீகரிக்கும் வகையில், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் முதன்மை மாநிலமாக அல்லது இணை மாநிலமாக அரியானாவை அறிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும், நாட்டின் விளையாட்டு மையமாகத் திகழும் அரியானாவிற்கு இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்குவதே தகுதியான முடிவாக இருக்கும் என அரியானா காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.