

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அசிதா பெர்னாண்டோ கைப்பற்றினார்.
ஜெய்ஸ்வால் அவுட் ஆன போது அவரை நோக்கி இலங்கை வீரர்கள் ஏதோ வார்த்தையை பயன்படுத்த ஆவேசம் அடைந்த அவர் பெர்னாண்டோவிடம் நெருக்கமாக சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜெய்ஸ்வாலின் ஹெல்மட் பெர்னாண்டோவின் நெற்றியில் லேசாக இடித்தது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தி இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்துபெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலையால் முட்டிய விவகாரத்தில் ஜெய்ஸ்வால் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் புஜாரா, சபாகரீம் ஆகியோர் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புஜாரா கூறியதாவது:-
இது பார்ப்பதற்கு சரியான ஒரு காட்சியாக தெரியவில்லை. ஒரு வீரராக உங்கள் (ஜெய்ஸ்வால்) உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் கோபம் வருவது இயல்புதான்.
அவர் ஏமாற்றம் அடைந்த நேரத்திலோ அல்லது சகவீரர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோதோ வெளிப்பட்ட கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனாலும் நிலைமை முற்றி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலைக்கு சென்றபோது உடல்ரீதியான மோதல் ஏற்பட்டது. இது ஆடுகளத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் விக்கெட் கீப்பர் சபாகரீம் கூறியதாவது:-
இது உடல்ரீதியான மோதல்கள் நிறைந்த விளையாட்டு அல்ல என்பதை அவர்களுக்கு யாராவது நினைவூட்ட வேண்டும். இது கிரிக்கெட்.
ஒருவருக்கொருவர் தலையால் முட்டிக் கொள்வது போன்ற செயல்கள் இதில் இருக்கக் கூடாது. இது முதிர்ச்சியற்ற செயல் என்று நான் கருதுகிறேன். கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்ற செயல்களுக்கு தேவையே இல்லை.
வேகப்பந்து வீச்சாளரோ அல்லது வேறு எந்த பந்து வீச்சாளரோ உங்களை சீண்டலாம். ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலேயே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முடியும். இது தேவையற்றது. ஏற்றுக் கொள்ள முடியாதது.
இத்தகைய வீரர்கள் அனைவரும் இந்த அழகான விளையாட்டில் தூதுவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.