

ஐரோப்பிய நாடுகள் (நேஷன்ஸ்) இடையேயான கால்பந்து ‘லீக்’ போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த ஆட்டம் ஒன்றில் ‘ஏ4’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல்-நார்வே அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போர்ச்சுக்கல் தரப்பில் கான்சிலோ (38-வது நிமிடம்), ரமோஸ் (79-வது நிமிடம்) ஆகியோரும், நார்வே அணியில் கிறிஸ்டோபர் ஆஜெரும் (36-வது நிமிடம்) கோல் அடித்தனர்.
போர்ச்சுக்கல் அணி வீரர் பிரான்சிஸ்கோ 86-வது நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக் கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
நார்வேக்கு எதிராக போர்ச்சுக்கல் பெற்ற 2-வது வெற்றியாகும். ஒட்டு மொத்தத்தில் 4-வது வெற்றியை பெற்றது. வேல்ஸ் (1-0), டென் மார்க் (4-2) ஆகியவற்றை ஏற்கனவே வீழ்த்தி இருந்தது.
இதன் மூலம் 12 புள்ளியுடன் போர்ச்சுக்கல் கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் டென்மார்க் 1-0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது.
‘ஏ2’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. நெதர்லாந்து அணியில் கூப்மைனர்ஸ் (31-வது நிமிடம்), சிர்க்சி (71), செர்பியா தரப்பில் ஸ்வெட் கோவிச் (35) ஆகியோர் கோல் அடித்தனர். நெதர்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும்.
2 ஆட்டத்தில் ‘டிரா’ செய்து இருந்தது. 8 புள்ளியுடன் இருக்கிறது. இதே பிரிவில் ஜெர்மனி-கிரீஸ் அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. கிரீஸ் 8 புள்ளியுடனும், ஜெர்–மனி 5 புள்ளியுடனும் உள்ளன.
‘பி3’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து-இஸ்ரேல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.