

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான (CWG) ஏற்பாட்டு குழுவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் ஆகியோரை விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகளாக நியமித்துள்ளது.
குஜராத் மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஹர்ஷ் சங்கவி இந்த ஏற்பாட்டு குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் இடம்பெறுவர். மேலும், இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் பிரதிநிதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங்கும் இதில் இடம்பெறுவார்.
"ராகுல் டிராவிட் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் இந்த ஏற்பாட்டு குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் துறையில் இருந்து ஜினல் மேத்தா மற்றும் அனன்யா பிர்லா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்" என்று விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா, விளையாட்டு துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆளும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
ராகுல் டிராவிட், தனது விளையாட்டு வாழ்க்கைக்கு பிறகு பயிற்சியாளராக செயல்பட்டு, இந்திய தேசிய அணியை 2024 டி20 உலக கோப்பை வெற்றியின் பக்கம் அழைத்து சென்றார். ஜினல் மேத்தா மற்றும் அனன்யா பிர்லா ஆகிய இருவரும் ஐ.பி.எல். அணிகளுடன் தொடர்புடையவர்கள்.
'டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ்' நிறுவனத்தின் தலைவரான ஜினல் மேத்தா, 'குஜராத் டைட்டன்ஸ்' அணியின் தலைவராக உள்ளார். அனன்யா பிர்லா, 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' அணியின் உரிமையாளர் குழுமத்துடன் தொடர்புடையவர்.
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான இந்த ஏற்பாட்டு குழுவில் மொத்தம் 12 முதல் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் நகரம் இந்த போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மிக சுருக்கமாக நடத்தப்பட்டன. ஆனால், அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டிகள் பிரமாண்டமான நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.