2வது போட்டியில் வெற்றி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
zimbabwe
Published on: 
Summary

ஷார்ஜாவில் நடந்த 2வது டெஸ்டிஸ் ஆப்கானிஸ்தான் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது ஜிம்பாப்வே.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

பிரெண்டன் டெய்லர் சதம்

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது. பிரெண்டன் டெய்லர் சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இன்னசென்ட் காலா 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நசீர் கான் மரூப்கி 7 விக்கெட்

ஆப்கானிஸ்தான் சார்பில் நசீர் கான் மரூப்கி 7 விக்கெட்டும், ஜியாவுர் ரஹ்மான் ஷரிபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் 217 ரன்னுக்கு ஆல் அவுட்

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு சுருண்டது. அப்சல் சசாய் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். ரஹ்மதுல்லா ஜட்ரன் 34 ரன் எடுத்தார்.

ஜிம்பாப்வே சார்பில் வின்சென்ட் மசகெசா 4 விக்கெட்டும், முசாராபானி 3 விக்கெட்டும், கிரீமர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிரெண்டன் டெய்லர் அரை சதம்

122 ரன்கள் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

பிரெண்டன் டெய்லர் அரை சதம் கடந்து 50 ரனனில் ஆட்டமிழந்தார். முசாராபானி 59 ரன்னும், கிரீமர் 50 ரன்னும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் சலீம் சபி 3 விக்கெட்டும், யாமின் அஹ்மத்சாய், நசீர் கான் மரூப்கி, ஜியா உர் ரகுமான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து ஆடவில்லை.

7வது விக்கெட்டுக்கு அப்சர் சசாய் உடன் நசீர் கான் மரூப்கி ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது. அரை சதமடித்த அப்சர் சசாய் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.

போராடி சதமடித்த நசீர் கான்

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நங்கூரம் போல் நின்று ஆடிய நசீர் கான் மரூப்கி போராடி சதமடித்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சில் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நசீர் கான் 101 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

டெஸ்ட் தொடரை வென்ற ஜிம்பாப்வே

இதன்மூலம் 2வது போட்டியில் 57 ரன் வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது முசாராபானிக்கும், தொடர் நாயகன் விருது பிரெண்டன் டெய்லருக்கும் வழங்கப்பட்டது.

X