

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இன்னசண்ட் காலா, பென் கரன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த நிலையில், இன்னசண்ட் காலா 34 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து பென் கரனுடன் பிரெண்டன் டெய்லர் இணைந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 65 ரன் சேர்த்தபோது பென் கரன் 42 ரன்னில் வெளியேறினார்.
பிரெண்டன் டெய்லர் உடன் பிரியன் பென்னட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன் சேர்த்தது.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய பிரெண்டன் டெய்லர் சதமடித்து அசத்தினார். அவர் 131 ரன்னில் அவுட்டானார். முதல் நாளில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 87 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்துள்ளது. பிரியன் பென்னட் 71 ரன்னும், வெஸ்லி மாதேவீர் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய பிரியன் பென்னட் சதமடித்து அசத்தினார். வெஸ்லி மாதேவீர் அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 128 ரன்னிலும், வெஸ்லி மாதேவீர் 54 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
ஆப்கானிஸ்தான் சார்பில் மொகமது சலீம், குவாயிஸ் அகமது தலா 3 விக்கெட்டும், ஜியா உர் ரகுமான் அக்பர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.