இரண்டு இன்னிங்சிலும் 500+ ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2 இன்னிங்சிலும் தலா 500 ரன்களை தாண்டியது.
எர்வின்
எர்வின்
Published on: 

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 504 ரன்கள் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரெண்டன் டெய்லர் 131 ரன்களும், பிரையன் பென்னட் 128 ரன்களும் விளாசினர்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 பேர் சதம்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக பேட்டிங் செய்தது. ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்து அசத்தினார். ரஹ்மானுல்லா ஜத்ரான் 113 ரன்களும், செடிகுல்லா அடல் 105 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 514 ரன்கள் குவித்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்சிலும் 500 ரன்களை கடந்த ஜிம்பாப்வே

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரண்டன் டெய்லர் 82 ரன்களும், பிரையன் பென்னட் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் கிரேக் எர்வின், மாதேவெரெ ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிரேக் எர்வின் இரட்டை சதம் (206), மாதேவெரெ சதம் (100) அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க போட்டி டிராவில் முடிவடைந்தது. ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த அணி என்ற வரலாற்று சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது.

X