

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணியும் 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி) மற்றும் வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பந்துவீச முடிவு செய்தார். அதன்படி பேட்டிங் தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஷஃபாளி வர்மா சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பிரதிகா ராவல் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்களும், தீப்தி சர்மா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.
எளிய இலக்கை துரத்திய வங்கதேச மகளிர் அணிக்கு திலாரா அக்தர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜௌரியா ஃபெர்டோஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சோபனா மொஸ்தரா 18 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கேபடன் நிகர் சுல்தானா 19 ரன்களை எடுத்தார்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 109 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி மற்றும் பிரேமா ராவத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.