மகளிர் ஆசிய கோப்பை: ஹாங்காங்-ஐ 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்களை விளாசினார்.
IND W Win
Published on

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் க்ரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஹாங்காங் மகளிர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா:

இந்திய மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவருடன் ஆடிய ஷஃபாளி வெர்மா 28 ரன்களிலும், பிரதிகா ராவல் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 11 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 10 ரன்களில் ஆட்டமிழந்தா்ர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஸ்மிருதி மந்தனா ரன் குவிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்களை (14 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை விளாசியது.

அபார பந்துவீச்சு:

194 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கேப்டன் நடாஷா மைல்ஸ் 27 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய யாஸ்மின் 11 ரன்களிலும், கேரி சான் 1 ரன்னிலும், மரினா லாம்ப்லோக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஹாங்காங் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 16.2 ஓவர்களில் ஹாங்காங் மகளிர் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பிரேமா ராவத், நந்தனி ஷர்மா மற்றும் ஸ்ரீசராணி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com