

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4-வது மாற்று பந்துவீச்சாளராகவோ அல்லது அதற்கு பிறகு களமிறங்கியோ மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை வியான் முல்டர் படைத்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 33.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 403 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியின் ஆக்கர்மேன் 138 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். வியான் முல்டர் 178 பந்தில் 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 100 ரன்கள் அடித்தார்.
403 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, வியான் முல்டரின் அபார பந்துவீச்சில் சரிந்தது.
முல்டர் 11 ஓவரில் 31 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். இதனால் வங்கதேச அணி 49.4 ஓவரில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் 31 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சு சாதனை இதுவாகும்.
இதற்குமுன், 2022-ம் ஆண்டு டர்பனில் கேசவ் மகராஜ் 32 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டும், அதே ஆண்டில் கெபர்ஹாவில் 40 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4-வது மாற்று பந்துவீச்சாளராகவோ அல்லது அதற்கு பிறகு களமிறங்கியோ, மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் வியான் முல்டர் படைத்துள்ளார். அவர் வெறும் 64 பந்துகளில் 7 விக்கெட் கைப்பற்றினார்.
இதற்குமுன், 1950-ம் ஆண்டு டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹக் டெய்பீல்ட் 68 பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் 76 ஆண்டுகால சாதனையை தற்போது வியான் முல்டர் முறியடித்துள்ளார்.