

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 17-ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோலாஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
திருச்சி அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் 33 பந்துகளில் 37 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷியாம் சுந்தர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
57 பந்துகளை எதிர்கொண்ட ஷியாம் சுந்தர் 57 பந்துகளில் 104 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இவரது சதம் மூலம் திருச்சி அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது.
திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், எசக்கி முத்து, முகமது அலி, சாய் கிஷோர் மற்றும் மதிவாணன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
சற்றே கடின இலக்கை துரத்திய திருப்பூர் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. திருப்பூர் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் வெறும் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோர் வெறும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவுடன் ஜோடி சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. அதிரடியாக ஆடிய ரஹேஜா 43 பந்துகளில் 87 ரன்கள் (2 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ரஞ்சன் பால் 36 பந்துகளில் 44 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் உதிரசாமி சத்யதேவ் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை (22) எடுத்தார். இவரும் சீராக ரன் குவிக்க தவற, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் திருச்சி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஈஸ்வரன் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், சரவண குமார் 1 விககெட் கைப்பற்றினார்.