

2026 டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தொடரின் 26-ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகல் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
திருச்சி அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் சுரேஷ் குமார் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய ஷியாம் சுந்தர் 36 பந்துகளில் 52 ரன்கள் (2 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகன்நாதன் கௌஷிக் 14 பந்துகளில் 20 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார்.
இவருடன் ஆடிய சஞ்சய் யாதவ் 40 பந்துகளில் 54 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார்.
இதன் காரணமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், ஸ்வப்நில் சிங் 2 விக்கெட்டுகளையும், பிரேம் குமார் மற்றும் விக்னேஷ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
192 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மோகித் ஹரிஹரன் 2 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆஷிக் 41 பந்துகளில் 75 ரன்கள் (11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய ராம் அரவிந்த் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 32 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இவர்கள் தவிர்த்து மோகன பிரசாத் மட்டும் 20 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தடுமாறினர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருச்சி சார்பில் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன், அந்தோனி தாஸ், செல்வ குமரன் மற்றும் சஞ்சய் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.