

டி.என்.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய கோவை கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுட்டனர். ராதாகிருஷ்ணன் 34 பந்துகளில் 48 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார். சுரேஷ் தன் பங்கிற்கு 44 பந்துகளில் 66 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாலசுப்ரமணியம் சச்சின் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த் தலா 12 ரன்களை எடுத்தனற். பின்னர் களணிறங்கிய கேப்டன் ஷாருக் கான் 18 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்க்ள்) விளாசினார்.
இதனால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. திருச்சி சார்பில் ராஜ்குமார் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஈஸ்வரன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
சற்றே கடின இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ராஜ்குமார் ரன் ஏதும் எடுக்காமல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த ஷியாம் சுந்தர் மற்றும் ஜெகன்நாதன் கௌஷிக் என இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆரம்பத்திலேயே திருச்சி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இன்னிங்ஸ் தொடக்கத்தில் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 27 பந்துகளில் 48 ரன்கள் (9 பவுண்டரிகள்) எடுத்து அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 1 ரன்னுக்கும், இவரைத் தொடர்ந்து ஆடிய ஜாஃபர் ஜமால் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். பிறகு வந்த ராஜ்குமார் 7 ரன்கள், அந்தோனி தாஸ் 6 ரன்கள், செல்வ குமரன் 11 ரன்களும், அதிசயராஜ் டேவிட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதனால் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 15.4 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 3 விக்கெட்டுகளையும், திவாகர் 2 விக்கெட்டுகளையும், ஆம்ப்ரிஷ் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதனால், கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கோவை கிங்ஸ் அணி 2026 டி.என்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை (ஆகஸ்ட் 28) நடைபெறும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.