டி.என்.பி.எல்.: மதுரை அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கோவை கிங்ஸ்

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
Kovai Kings Champion
Published on

2026 டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்தது. இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கோவை அபார ஆட்டம்:

கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ராதாகிருஷ்ணன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் லோகேஷ்வர் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி சேர்ந்தார். சச்சின் நிதானமாக விளையாட, அந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த்ரே சச்சின் 34 பந்தில் அரைசதம் அடித்தார். சச்சின் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது.

4-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் ஷாரூக்கான் ஜோடி சேர்ந்தார். ஷாரூக் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்ப்ரிஸ் களம் இறங்கினார். அந்த்ரே சித்தார்த் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.

மதுரை பாந்தர்ஸ் சொதப்பல்:

183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் மற்றும் சித்தார்த் மகாதேவன் ரன் ஏதும் எடுக்காமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்கத்திலேயே தடுமாறிய கோவை கிங்ஸ் அணிக்கு சதுர்வேத் மற்றும் ஹரி ராகவேந்தரா ஜோடி சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ரன் குவிப்பில் ஈடுபட்டது.

சதுர்வேத் 28 பந்துகளில் 40 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசி தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, ஹரி ராகவேந்திரா 14 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாலசந்தர் அனிருத் 25 பந்துகளில் 24 ரன்ளை சேர்த்தார்.

கோவை கிங்ஸ் சாம்பியன்:

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கோவை கிங்ஸ் அணி 84 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கோவை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் மற்றும் ஷாருக் கான் தலா 3 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்டுகளையும் ஜதாவேத் சுப்ரமணியன் 1 விக்கெட் எடுத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com