

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸ் முடிவுற்ற நிலையில், 241 எனும் கடின இலக்கை துரத்தி மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை விளாசியது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அபாரமாக ஆடிய போதிலும், 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 158 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.