

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2027 சீசனின் 21-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மோகித் ஹரிஹரன் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர். ஹரிஹரன் 13 ரன்களிலும், என். ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷிக் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ராம் அர்விந்த் அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். அதன்பின் ஸ்வப்னில் சிங் (20), அஷ்வந்த் வல்தபா (5), மோகனா பிரசாத் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
6.1 ஓவரில் 50 ரன்களை தொட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 10 ஓவரில் 100 ரன்களை தொட்டது. ஆனால், கடைசி 10 ஓவரில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.3 ஓவரில் 167 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
கோவை கிங்ஸ் அணியில் ஆர்.எஸ். அம்ப்ரிஸ் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளும், ஆர். திவாகர், ஜி. கிஷோர், ஜே. சுப்ரமணியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.