

மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அடிக் உர் ரகுமான் 30 பந்தில் 43 ரன்கள் குவித்தார். ரோகன் பத்ரா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
திருப்பூர் அணி சார்பில் மதிவாணன் 3 விக்கெட்டும், நடராஜன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி 17 பந்தில் 7 சிக்சர் உள்பட 48 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மதுரை அணி தான் ஆடிய 6 போட்டிகளில் 2வது தோல்வி அடைந்துள்ளது.