

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் (எலைட்) 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. இதில் 'டி' பிரிவில் தமிழ்நாடு-உத்தரகாண்ட் இடையிலான மோதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற தமிழக கேப்டன் சாய் கிஷோர் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய உத்தரகாண்ட் அணி தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 56.2 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவ்னீஷ் சுதா 54 ரன்னும், மயங்க் மிஷ்ரா 33 ரன்னும் எடுத்தனர்.
தமிழகம் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் குவித்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்புடன் ஆடி சதமடித்து 136 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதம் கடந்து 77 ரன்னில் வெளியேறினார். ஜெகதீசன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
179 ரன்கள் பின்தங்கிய நிலையில் உத்தரகாண்ட் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தமிழக வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இரண்டாவது இன்னிங்சிலும் உத்தரகாண்ட் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 6 விக்கெட்டும், அஜித் ராம் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.