பேட்டர்களுக்கு 50 ஓவர் கிரிக்கெட் மிகவும் கடினமானது: சூர்யகுமார் யாதவ்

ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என் மீது எனக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்கிறது.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
Published on
Summary

ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்வது என்பது மனரீதியாக நுணுக்கமான மற்றும் பல நிலைகளைக் கொண்ட ஒரு விஷயம். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஒரு பேட்ஸ்மேன் தனது ஆட்ட வேகத்தை (gears) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய டி20 அணி கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவுக்கு தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை. இவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்ற அடுத்த தொடரில் சேர்க்கப்படவில்லை.

2021 முதல் 2023 வரை ஒருநாள் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ்

35 வயதாகும் இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு 113 போட்டிகளில் 4 சதம், 25 அரைசதங்களுடன் 3272 ரன்கள் குவித்துள்ளார்.

ஆனால் ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் 2021 முதல் 2023 வரை மட்டுமே விளையாடினார். 37 போட்டிகளில் 773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடங்கும்.

இவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து பல்வேறு சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஒருநாள் போட்டிதான் பேட்டர்களுக்கு மிகவும் கடினமானது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

ஊகத்தின் அடிப்படையில் நாம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் 2016-லேயே அணிக்கு வந்திருந்தால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பேன், ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பேன் என்று சொல்லலாம். ஆனால் யதார்த்தத்தைப் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஒரே ஒரு போட்டியிலும் ஒரே ஒரு இன்னிங்ஸிலும் மட்டுமே விளையாடினேன். அதற்குள் மற்ற வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டதால், எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, என் மீது எனக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்கிறது. இது டி20-யைப் போலவே வெள்ளைப்பந்து (white-ball) வடிவிலான ஆட்டம்தான். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஆட்டமுறைக்கு தேவையான கடின உழைப்பை நான் அளிக்கவில்லை என்றே தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்வது என்பது மனரீதியாக நுணுக்கமான மற்றும் பல நிலைகளைக் கொண்ட ஒரு விஷயம். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஒரு பேட்ஸ்மேன் தனது ஆட்ட வேகத்தை (gears) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

சவாலான வடிவம்

என் பார்வையில், ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் சவாலான வடிவம் ஒருநாள் கிரிக்கெட்தான். நீங்கள் வரிசையில் கீழே இறங்கினாலும் சரி, அல்லது வேறு எந்த இடத்தில் இறங்கினாலும் சரி, இது பொருந்தும்.

நீங்கள் நான்காவது இடத்தில் இறங்கினால், அணி 0 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்க வேண்டியிருக்கலாம். ஆறாவது இடத்தில் இறங்கினால், 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் விழுந்திருக்கலாம். நீங்கள் கிட்டத்தட்ட ஒரு டெஸ்ட் போட்டியைப் போலவே ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

பந்து வீச்சாளர்களின் திறனை மதித்து, ஆரம்பக்கட்ட நெருக்கடியைச் சமாளித்து, 50 அல்லது 75 ஸ்ட்ரைக் ரேட்டில் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். பிறகு 100 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு வேகத்தை அதிகரிக்க வேண்டும். இறுதியாக, டி20 போட்டிகளைப் போல 130-140 ஸ்ட்ரைக் ரேட்டை எட்டும் வகையில் அதிரடியாக ஆட வேண்டும்.

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com