

கொல்கத்தா:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி வான்கடேவில் நடந்த மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கொல்கத்தா நிர்ணயித்த 221 ரன் இலக்கை மும்பை அணி 5 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.
கொல்கத்தா அணியில் பேட்டிங் நன்றாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் கேப்டன் ரஹானே (67 ரன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (51 ரன்) அரைசதம் அடித்தனர். பின் ஆலென் (37 ரன்), ரிங்கு சிங் (33 ரன்) பயனுள்ள பங்களிப்பை வழங்கினர். ஆனால் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் விலகிய நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவும் உடல் தகுதியை எட்டவில்லை.
அத்துடன் ரூ.25.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகுவலி பிரச்சினையில் இருந்து முழுமையாக மீளாததால் பந்து வீச முடியாத நிலையில் உள்ளார். இவை அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது. முந்தைய ஆட் டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வைபவ் அரோரா, பிளஸ்சிங் முஜரபானி, சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி பெரிதாக சோபிக்கவில்லை.
கடந்த ஆண்டு உள்ளூர் மைதானத்தில் கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவே அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. எனவே இந்த முறை அந்த அணி உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆரம்ப சறுக்கலில் இருந்து மீண்டு வருவதற்கு வியூகம் தீட்டும்.
ஐதராபாத் அணிக்கும் முதல் ஆட்டம் சறுக்கலாகவே அமைந்தது. சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய அந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூருவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 202 ரன் இலக்கை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எளிதில் எட்டியது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் கேப்டன் இஷான் கிஷன் (80 ரன்), அனிகேத் வர்மா (43 ரன்), ஹென்ரிச் கிளாசென் (31 ரன்) தவிர மற்றவர்கள் சொதப்பினார்கள். அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி வந்த வேகத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். வலுவான பேட்டிங் படையை கொண்டுள்ள அந்த அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இல்லை. கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் தொடக்க கட்ட ஆட்டங்களை தவறவிடுவது பெருத்த பின்னடைவாகும். பந்து வீச்சில் ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
முந்தைய தோல்வியை மறந்து வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் அனுகூலம் கொல்கத்தா அணிக்கு சாதகமான அம்சமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: அஜிங்யா ரஹானே (கேப்டன்), பின் ஆலென், கேமரூன் கிரீன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி. வைபவ் அரோரா, பிளஸ்சிங் முஜர பானி, கார்த்திக் தியாகி.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (கேப் டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனி கேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் பட்டேல், டேவிட் பெய்ன், ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா.