

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் ரங்கனா ஹெராத் 433 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அந்த வரிசையில் 434 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 8 டெஸ்ட்களில் 46 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.