

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 288 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அரை சதமடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 6 ரன்னில் அவுட்டானார். பசிந்து சுரியபந்தாரா டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 2 ரன்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஆக இருந்தது.
5வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா-சோனல் தினுஷா ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 31 ரன்னும், சோனல் தினுஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினர்.
நாளை கடைசி நாள் என்பதால் மேலும் 288 ரன்களை எடுத்தால் இலங்கைக்கும், மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கும் வெற்றி கிடைக்கும். எனவே காலே டெஸ்ட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.