பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இலங்கை போராட்டம்-மூன்றாம் நாள் முடிவில் 309/9

இலங்கையின் குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா, மிலன் ரத்நாயகே ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
kusal mendis, sonal dinusha
Published on: 
Summary

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இலங்கை 9 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

98 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 98 ரன்களுக்கு சுருண்டது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், ரசாவுல்லா, அமீர் ஜமால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

காஜி கோரி அரை சதம்

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காஜி கோரி அரை சதம் கடந்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அசான் அவைஸ் 47 ரன்னில் அவுட்டானார். ரசாவுல்லா 42 ரன்னில் வெளியேறினார்.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 227 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா, மிலன் ரத்நாயகே அரை சதம்

4வது விக்கெட்டுக்கு இணைந்த பசிந்து சூர்யபந்தரா-தனஞ்செய டி சில்வா ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், சோனல் தினுஷா, மிலன் ரத்நாயகே ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.

குசால் மெண்டிஸ் 53 ரன்னும், சோனல் தினுஷா 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. மிலன் ரத்நாயகே 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இலங்கை அணி 82 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 3 விக்கெட்டும், மொகமது அப்பாஸ், ரசாவுல்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஒரு விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X