

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவித்தது.
100 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க அணியை ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர் ஜோடி சரிவிலிருந்து மீட்டது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 154 ரன்களை சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய ரிக்கல்டன் 101 ரன் எடுத்து அவுட்டானார். வியான் முல்டர் 115 ரன் விளாசினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 134.4 ஓவரில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கடைசி நாளான இன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
மேட் ரென்ஷா டக் அவுட்டானார். லபுஷேன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 14 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறினர். இதனால் 26 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
9-வது விக்கெட்டுக்கு இணைந்த நாதன் லயன், பாட் கம்மின்ஸ் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 57.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 176 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் 6 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.