அசத்தல் பந்துவீச்சு: 2வது டெஸ்டில் வென்று ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது தென் ஆப்பிரிக்கா

2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
rabada
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலை வகித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெம்பா பவுமா சதம்

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 127.1 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் டெம்பா பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 179 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக மார்கோ யான்சென் 85 ரன்னும், சைமன் ஹார்பர் 82 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

யான்சென் 5 விக்கெட்

தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 5 விக்கெட்டும், ரபாடா, வியான் முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 326 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் அரை சதம் கடந்து 87 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிராவிஸ் ஹெட் சதம்

இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

5வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட்-ஸ்காட் போலண்ட் ஜோடி 59 ரன் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 121 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஸ்காட் போலண்ட் 40 ரன்னும், அலெக்ஸ் கேரி 37 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலைக்கு கொண்டு வந்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், வியான் முல்டர் 3 விக்கெட்டும், சைமோன் ஹார்மர் 2 விக்கெட்டும், யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது டெம்பா பவுமாவுக்கு அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com