இக்கட்டான நிலையில் அசலங்கா சதம்: அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

சரித் அசலங்கா 127 ரன் விளாசியதால் இலங்கை 214 ரன்கள் சேர்த்தது.பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 168 ரன்னில் சுருட்டினர்.
இக்கட்டான நிலையில் அசலங்கா சதம்: அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
Published on

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினார்கள்.

பதும் நிஷாங்கா 4 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் சரித் அசலங்கா களத்தில் நின்றார்.

ஜனித் லியனாகே (11), துனித் வெலாலாகே (30) ஆகியோர் துணையுடன் அசலங்கா 71 பந்தில் அரைசதம் கடந்தார். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 32.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அசலங்கா 50 ரன்னில் இருந்தார்.

அடுத்து இஷான் மலிங்கா களம் இறங்கினார். இவரை ஒரு முனைவில் வைத்துக் கொண்டு மறுமுனையில் அசலங்கா சிறப்பாக விளையாடினார். 43-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார் அசலங்கா. அப்போது மறுமுனையில் மலிங்கா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.

பின்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் 126 பந்தில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசலங்கா ஸ்கோரில் 14 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 214 ரன்னாக இருந்தது. கடைசி விக்கெட்டும் அதே ரன்னில் இழக்க இலங்கை 46 ஓவரில் 214 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

மேத்யூ ஷார்ட் ரன்ஏதும் எடுக்காமலும், மெக்-கர்க் 2 ரன்னிலும், கூப்பர் கொனோலி 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்மித் 12 ரன்னும், லபுசேன் 15 ரன்னும் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் தாக்குப்பிடித்து 41 ரன்கள் அடித்தார். ஆரோன் ஹார்டி 32 ரனக்ளும், சீன் அபோட் 20 ரன்களும், ஆடம் ஜம்பா 20 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 33.5 ஓவரில் 165 ரன்னில் சுருண்டது.

இதனால் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீக்ஷனா 9.5 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெலாலாகே, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com