பாக். முத்தரப்பு தொடர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக 430 ரன்களை சேசிங் செய்து த்ரில் வெற்றி பெற்ற இலங்கை

இலங்கை சார்பில் சிறப்பாக ஆடிய ஜனித் லியானகே 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
SL WIN
Published on: 

பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ராவல்பிண்டியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது.

இங்கிலாந்து அபார பேட்டிங்:

இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய டாம் பேன்டன் அரை சதம் (50) விளாசினார். பென் டக்கெட் 29 ரன்கள் எடுத்தபோது, வெல்லாலகே பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

பிறகு களமிறங்கிய, ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் ரூட், 8 பவுண்டரிகள் விளாசி 69 ரன்கள் எடுத்திருந்தபோது, அசித பெர்னாண்டோ பந்து வீச்சில் வெல்லாலகேவிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினார்.

இரட்டை சதம்:

தொடர்ந்து புரூக்குடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி, 30 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி கேப்டனான ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி, இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய அவர், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

எனினும், ஆட்டத்தின் கடைசி பந்தில் 202 ரன்கள் (116 பந்துகள், 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது, அவர் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், 50 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 429 ரன்கள் எடுத்தது.

த்ரில் வெற்றி:

430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. எனினும், 4 ஓவர்கள் முடிவிலேயே அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 23 ரன்களுடன் திணறியது. கமிந்து மெண்டிஸ் (18), கேப்டன் குசல் மெண்டிஸ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

எனினும், அவிஷ்கா பெர்னாண்டோ 97 (83 பந்துகள் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) அதிரடியாக விளையாடினார். பவன் ரத்நாயகே 130 (106 பந்துகள் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்), தசுன் ஷனாகா 97 (50 பந்துகள் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்கள்) என அதிரடியாக விளையாடினர். ஜனித் லியானகே 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் எடுத்தது. இதனால், ஒரு பந்து மீதம் இருக்கும்போது இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com