

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் தொடக்க வீரர்களாக இறங்கினர். அணியின் ஸ்கோர் 45-ஆக இருக்கும்போது பதும் நிசங்கா 25 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிசுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்தார்.
2-ஆவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவன் ரத்நாயகே 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன், ரேஹான் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணிக்கு டாம் பேண்டன் மற்றும் பென் டக்கெட் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. பேண்டன் 62 பந்துகளில் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, இவருடன் ஆடிய டக்கெட் 63 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார். பிறகு களமிறங்கிய ஜோ ரூட் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
மிடில் ஆர்டரில் ஜாஸ் பட்லர் மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் இன்னிங்ஸ் ஆடினர். இருவரும் முறையே 69 மற்றும் 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய ரோஹன் அகமது ரன் ஏதும் எடுக்காமலும், கஸ் அட்கின்சன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுசனாகா மற்றும் இஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்ணான்டோ மற்றும் சச்சின்டு தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில், அந்த அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதன் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.