

முதல் இன்னிங்சில் 106 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும், ரென்ஷா அபாரமாக விளையாடி 190 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 390 ரன்கள் குவித்தது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு வீரரால் கூட அரைசதம் அடிக்க முடியவில்லை. இதனால் 284 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 106 ரன்கள் முன்னிலைப் பெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்றைய 4-வது நாளில் 106 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன மேடின்சன் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை தவறவிட்டார். டிராவிட் ஹெட் 11 ரன்களிலும், லபுசேன் 37 ரன்களிலும், ஸ்மித் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ரென்ஷா, 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெப்ஸ்டர் 39 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் 106 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் மொத்தமாக 420 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று 3-வது செசன் மற்றும் நாளை ஒருநாள் மீதமுள்ள நிலையில் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.