

இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.