இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது- ரோகித் சர்மா

இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது. சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது- ரோகித் சர்மா
Published on

கொழும்பு:

இந்திய அணியை விடவும் இலங்கை அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியால் கவலைப்பட தேவையில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்டத்திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை.

சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்படும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

இந்த தொடரின் மூலம் சில விசயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

இவ்வாறு ரோகித் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com