கடைசி விக்கெட்டுக்கு அதிரடி: வெஸ்ட் இண்டீஸின் 50 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் ஜோடி

ஷதாப் கான் 96 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார்.
ஷதாப் கான்- ஹாரிஸ் ராஃப்
ஷதாப் கான்- ஹாரிஸ் ராஃப்
Published on: 

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் 50 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து 46.4 ஓவரில் 241 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் டக்அவுட் 111 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். சாம் கர்ரன் 42 ரன்களும், கஸ் அட்கின்சன் ஆட்டமிழக்காமல் 36 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட் சாய்த்தார்.

பாகிஸ்தானுக்கு 242 இலக்கு

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 33.5 ஒவரில் 154 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

50 வருட சாதனை முறியடிப்பு

ஆனால், கடைசி விக்கெட்டுக்கு ஷதாப் கான் உடன் ஹாரிஷ் ராஃப் ஜோடி சேர்ந்தார். ஷதாப் கான் அதிரடியாக விளையாடினார். ஹாரிஸ் ராஃப் ஆட்டமிழக்காமல் பார்த்துக் கொண்டார். ஷதாப் கான் 96 பந்துகளில் 113 ரன்கள் விளாச 47.1 ஓவரில் 243 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

கடைசி விக்கெட்டுக்கு ஷதாப் கான்- ஹாரிஸ் ராஃப் ஜோடி 80 பந்துகளில் 89 ரன்கள் குவித்தது. இதன்மூலம் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்த ஜோடி என்ற 50 ஆண்டு கால சாதனையை பாகிஸ்தான் முறியடித்துள்ளது.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த தெரிக் முர்ரே- ஆண்டி ராப்ர்ட்ஸ் ஜோடி 1975 உலக கோப்பையில் 64 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்?

முத்தரப்பு தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். பாகிஸ்தான் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இலங்கை 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. இலங்கை ஒரு போட்டியில் தோல்வியடைந்து, இங்கிலாந்து கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் இலங்கை அல்லது இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com