

கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து 356 ரன்கள் குவித்துள்ள நிலையில், இந்தியா 116 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் குர்னூர் பிரார் அறிமுகம் ஆனார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. பிளண்டல் 53 ரன்களுடனும், பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிலிப்ஸ் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் நேற்றைய 36 ரன்களிலேயே வெளியேறினார். அடுத்து வந்த நாதன் ஸ்மித் 26 ரன்களும், ஜேமிசன், மாட் ஹென்ரி ஆகியோர் தலா 19 ரன்களும் சேர்த்தனர்.
பிளண்டல் 89 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 116.3 ஓவர்களை சந்தித்து 356 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஹென்ரி வீசிய இந்த ஓவரின் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன் போல்டானார். அவர் ரன்ஏதும் எடுக்கவில்லை.
அடுத்து கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். கே.எல். ராகுல் 25 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த சுப்மன் கில் 17 ரன்களிலும், ரிஷப் பந்த் 23 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 116 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் உள்ளது. ஜூரல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன், டஃபி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹென்ரி மற்றும் நாதன் ஸ்மித் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.