ஆப்கான் அறிமுக வீரர் மரூஃப்கில் சதத்தால் பரபரப்பாக சென்ற டெஸ்ட்: ஜிம்பாப்வே த்ரில் வெற்றி

சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றும் மரூஃப்கில்லால் போட்டியை டிரா செய்ய முடியாமல் போனது.
ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே டெஸ்ட்
Published on: 

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் ஷார்ஜாவில் நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 339 ரன்கள் சேர்த்தது. பிரெண்டன் டெய்லர் 119 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகம் ஆன பவுலர் நசீர் கான் மரூஃப்கில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217

பின்னர் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அஃப்சர் ஜஜாய் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் வின்சென்ட் மசெகெசா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 295/9 டிக்ளேர்

பின்னர் 112 ரன்களுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது, பிரெண்டன் டெய்லர் 50 ரன்களும், முசாரபானி 59 ரன்களும், கிரிமர் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஆப்கானிஸ்தானுக்கு 418 ரன் இலக்கு

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 418 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல் மாலிக் (8), ரஹ்மானுல்லா (15), செதிகுல்லா அடல் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரஹ்மத் ஷா 30 ரன்கள் சேர்த்தார். ஹஸ்மதுல்லா ஷாஹிதி 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு அஃப்சர் ஜஜாய் உடன் இக்ராம் அலிகில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 275 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. அஃப்சர் ஜஜாய் 20 ரன்களுடனும், அலிகில் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு கடைசி நாளில் 275 ரன்கள் தேவை

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கடைசி நாளான இன்று 275 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஃப்சர் ஜஜாய் மற்றும் அலிகில் ஆட்டத்தை தொடர்ந்தனர். அலிகில் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து அஃப்சர் ஜஜாய் உடன், அறிமுக வீரர் நசீர் கான் மரூஃப்கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறியது.

நசீர் கான் மரூஃப்கில் அபார சதம்

இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். அதேவேளையில் போட்டியை டிரா நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் அஃப்சர் ஜஜாய் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7 விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த யாமின் அகமதுசாய் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். என்றாலும் நசீர் கான் மரூஃப்கில் கடைசி 2 வீரர்களை வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.

கடைசி 5 ஓவரில் தோல்வி

கடைசி 5 ஓவரை தாக்குப்பிடித்தால் போதும் என்ற நிலையில் நசீர் கான் மரூஃப்கில் கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய ரஹ்மான் உடன் மோதினார். ஆனால், ரஹ்மான் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 360 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. நசீர் கான் மரூஃப்கில் 242 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது முயற்சி 27 பந்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

X